தேர்தல் வழக்கு… இசக்கி சுப்பையாவின் கோரிக்கை நிராகரிப்பு!

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இசக்கி சுப்பையா.

இவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.

இதற்கிடையே இசக்கி சுப்பையாவின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்காளர் காந்திமதி நாதன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி இசக்கி சுப்பையாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த சூழலில் தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று இசக்கி சுப்பையா மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி பிபி பாலாஜி, வாக்காளர் காந்திமதி நாதனின் மனுவை நிராகரிக்க மறுத்துவிட்டார்.

இசக்கி சுப்பையாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி பிபி பாலாஜி, தேர்தல் வழக்கு தொடர்பான மனுவில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள சில பத்திகளை நீக்க வேண்டும் என்ற இசக்கி சுப்பையாவின் கோரிக்கையை ஏற்று அவற்றை நீக்க உத்தரவிட்டார்.

அம்பாசமுத்திரத்தில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்ற பொதுநல வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஏழு தொகுதிகள் காலியாக உள்ளன. ஆனால் அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், திருச்சி கிழக்கு, விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் வழக்கு காரணமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment